Sunday, July 15, 2012

முப்பதின் முனைப்பும் நாற்பதின் நோக்கமும்

இந்த முப்பதுக்கும், நாற்பது வயதுக்கும் நடுவிலே இருக்கும் வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமானது. இருபதில் இருக்கும் துடிப்பும், இளமையின் தூண்டுதலும், வாழ்க்கையில் பெரிதாக சாதிக்கவேண்டும் என்ற எண்ணமும், முப்பதை தாண்டி தொடர்கிறது. உடல் சற்றே தளர்ந்தாலும், மனது விட்டுக்கொடுப்பதில்லை. முனைப்பு முப்பதுகளின் முகப்பாகிறது. நாற்பது வாழ்க்கையின் வெற்றி, தோல்விகளை ஓரளவு அனுபவித்த பின்பு ஒரிரு அடையக்கூடிய லட்சியங்களை நோக்கமாக கொள்கிறது. நாற்பதில் விவேகம் துளிர்க்கிறது. ஆனால், இந்த முப்பதுக்கும், நாற்பதிற்கும் நடுவிலே இருக்கும் பத்தாண்டுகள் மிகவும், மனதளவிலே, ஒரு பெறும் நெடும் பயணமாக தோன்றுகின்றது. கலயாணமானவர்களுக்கு, குடும்ப முன்னேற்றமும், கல்யாணமாகாதவருக்கு வாழ்க்கைப்பாதைப் பற்றிய சிந்தனையும் தீவிரப்படுகின்றது. வாழ்க்கையை இலெசாக எடுத்துக்கொள்வதா அல்லது சீரியசாக எடுத்துக்கொள்வதா என்ற முடிவு எடுக்க மனது குழப்பம் கொள்கின்றது. கனவுகளின் தரிசனம் மறைந்து, நிஜங்களின் நிதர்சனம் நிகழும்போது வாழ்க்கை பாடம் கற்றுக்கொள்கிறது. அந்தப்பாடமே, மீதி இருக்கும் வாழ்க்கைக்கதைக்கான கருவை சுமக்கின்றது. உன் வாழ்க்கை உந்தன் கையில் என்பது உண்மையா என முப்பது புலப்படுத்துகின்றதா, அல்லது நாற்பது உரைக்குமா என்பதை காலம்தான் கூறவேண்டும்.