மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்பது பழமொழி. அதிலும் உடல் ஊனமுற்றோருக்கு சேவை செய்வது நம்மால் முடிகின்ற
ஒரு சிறு தொண்டாகும். அதிலும் அவர்கள் உடலால் ஊனமுற்றர்களே ஒழிய மனதால் அல்ல. அவர்களின் செயலாற்றல் யாருக்கும் குறைந்ததல்ல.
நான் 'samarthanam trust for the disabled' எனும் உடல் ஊனமுற்றோருக்கான சேவை நிறுவனத்தில் ஒரு தொண்டனாக சென்று வருகிறேன். அங்கே பார்வையற்றோர் மற்றும் பார்வை குறைபாடுள்ள குழந்தைகளுக்கு கல்வி பாடங்கள் மற்றும் சமூக செயல்திறன் வளர்க்கும் வகுப்புகள் எடுக்கின்றேன். அவர்களுடன் பழகும்போதும், பாடம் எடுக்கும் போதும் நானும் சேர்ந்து நெறைய கற்றுக்கொண்டுள்ளேன். அவர்களின் கண்ணோட்டத்தில் இந்த உலகைப்புரிந்து கொள்ளும்போது ஒரு புதிய பரிணாமம் காணக் கிடைக்கின்றது. மனதுக்கு ஒரு அலாதியான மகிழ்ச்சியும் கிடைக்கின்றது.
அவர்களுக்கு தேவை நமது அனுதாபம் அல்ல. ஒரு வழிகாட்டும் அன்புக்கரம் மட்டுமே. கல்வி மூலம் இயற்கையின் இந்த ஏற்றத் தாழ்வை நம்மால் சீரமைக்க முடியும் .
சமூக நீதி என்ற பெயரில் 'இட ஒதுக்கீடு' என்னும் சட்டம் மூலம் கல்வி மற்றும் அரசு நிறுவனங்களில் சலுகை ஏற்படுத்தி கொடுக்கும் இந்திய அரசு , ஏனோ இந்த வர்கத்தின் குறை தீர்க்க முயற்சி எடுப்பதில்லை. அடிப்படை கல்வி வசதி கூட ஏற்படுத்தாமல் உயர் கல்வியில் கவனம் செலுத்துவது 'அடித்தளம் இல்லாத அடுக்கு மாடி கட்டிடம் ' போலாகும்'. இந்திய அரசு இந்த விஷயத்தில் அக்கறை செலுத்தி ஊனமுற்றோரையும் சமுதாய நீரோட்டத்தில் சேர உதவி புரிய வேண்டும். அப்போதுதான் இந்திய நாடு உண்மையிலேயே ஒரு வல்லரசாக முடியும்.
நமது இந்த அவசரமான வாழ்கையிலே சமுதாய தொண்டையும் செய்ய நேரம் ஒதுக்க வேண்டும். சிறு துளி பெருவெள்ளம் என்பது போல நாம் செய்யும் சிறு சிறு உதவிகள் நமது ஊனமுற்ற சகோதர சகோதரிகளுக்கு வாழ்க்கையில் ஒரு பெரிய ஊன்றுகோலாக அமையும்.