Thursday, April 29, 2010

About soul, spirituality and religion

ஆன்மீகமும் ஆன்மாவும்
=========================
இன்று இந்த வலைப்பின்னலில் நான், ஆன்மீகம் மற்றும் ஆன்மாவின் இடையே இருக்கும் உறவினைப்பற்றி எனது சிந்தனைகளை உங்களிடம் பகிர்கிறேன்.
முதலில் அவற்றின் அர்த்தங்களை ஆராய்வோம். ஆன்மீகம் என்பது நமது மனித உடம்புக்குள் இருந்து ஆட்டுவிக்கும் ஆன்மா எனப்படுவதை உணர்வது, புரிந்துகொள்வது. தனது அத்வைதத்தை எடுத்துக்கூறும் முயற்சியில் ஜகத்குரு ஆதிசங்கரர், ஒரு மனிதரின் விழிப்பு நிலை, உறக்க நிலை மற்றும் கனவு (ஆழ்ந்த உறக்கம்) நிலையை உதாரணமாக எடுத்துரைக்கிறார். விழிப்பு நிலையில் நாம் நமது மனம், உணர்வு,புலன், எண்ணங்களின் மூலம் நமது உடலை மூளை ஆட்டுவிப்பதை காண்கிறோம். இதில் பெரும்பாலோர்ற்கு சந்தேகம் இருப்பதில்லை. உறக்க நிலையில் நமது உடல் படுத்துக்கொண்டு இருக்கும்பொழுது மனம் அலைபாய்வதை உணர்கிறோம். உடல் கிடக்கும்போது அலைபாய்பவர் யார். கனவு நிலையில் நாம் காணாத தேசங்களுக்கு செல்பவர் யார். கனவில் நம்மை மற்றவர் தாக்கும்பொழுது நமது பூதவுடல் காயப்படுவதில்லை, ஆனால் நமக்குள்ளே ஒருவர் வலியோடு அழுகிறார், வேதனைப்படுகிறார். யாரவர்? அவரே ஆன்மா ஆவார்.
உண்மை என்னவெனில் ஆன்மாவே நாமவோம். இந்த உடல் நமக்காக தற்காலிகமாக இந்த உலகில் நமது கர்மாவை கரைப்பதற்கு இறைவன் என்றழைக்கப்படும் ஒருவரால் வழங்கப்பட்டது. இந்த கர்மா கரையும்வரை எத்தனை பிறவிகள் வேண்டுமானாலும், எத்தனை விதமான உயிரினமாகவும் நாம் பிறக்க முடியும். கர்மா கரைந்த  பின்னர் மட்டுமே நாம் சுதந்திரத்தை அடைய முடியும். பகவத் கீதை இந்த உண்மையையே எடுத்துக்கூறுகிறது. கர்மாவை கரைப்பது சுலபமில்லை. பாப கர்மத்தை செய்யும்பொழுது நாம் மனிதப்பிறவினும் கீழான பிறவியை அடைகின்றோம். அந்த நிலையில் ஆன்மாவைப்பற்றி நமக்கு பிரக்ஞையே  இருக்கப்போவதில்லை. மனிதப்பிறவியின் துரதிர்ஷ்டம் நாம் ஆன்மாவை நம்புவதில்லை, அல்லது அறிந்தும் உணர்வதில்லை. இந்த உலக மாயை அவ்வளவு சக்திவாய்ந்தது. எல்லாம் மாயை, இந்த உடல் நானல்ல, அதன் உள்ளிருக்கும் ஒன்றே நான். அது என்றும் அழிவதில்லை என்று கீதை எடுதுககூறும், உண்மையை நாம் நம்பும்போது தெளிவு பிறக்கிறது. இந்த உலகில் நாம் எதிர்கொள்ளும் அனுபவங்களில் மாயையின் பங்கை அறியும்போது, மாயை விளக்கி உண்மையை அறியும்போது, இந்த உலகை விட்டு செல்ல ஆன்மாவுக்கு வழி தெரிகின்றது. அந்த நொடியிலிருந்து நமக்கு நிர்வாண நிலை அடைய நம்பிக்கை பிறக்கின்றது.
ஆன்மிகம் என்பது ஆன்மா மற்றும் ஆன்மாவை இந்த உலகின் சூழலிலிருந்து விடுதலை அடையும் யுக்திகளை எடுத்துக்கூறும் வழியே ஆகும். ஒரு ஆன்மீக வாதி மதவாதியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. தேர்ந்த ஆன்மீகவாதி மதத்தை ஒரு கருவியாக பார்க்கிறார். மதவாதி, ஆன்மாவை உணராமல் தன் மதத்தை பின்பற்றுவது மட்டுமே குறிக்கோளாக எண்ணுகிறார். அதன் மூலம் தமக்கு அடுத்த பிறவியில் மேலும் உயர்ந்த நிலையை கடவுள் அருளுவர் என்று நம்புகிறார். ஆன்மீகவாதியோ, அடுத்த பிறவியே வேண்டாமப்பா, கடவுளே  நான் உன்னிலிருந்து வந்தவன் உன்னிலே மீண்டும் இணைய வேண்டுமப்பா என்று கதறுகிறார்.
நாத்திக வாதியோ, இந்த உலகையே எல்லாமாக பார்க்கிறார். கடவுள் இல்லை. ஆன்மா இல்லை, உடலே எல்லாம் என்று எண்ணுகிறார். கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்று நான் இங்கு வாதிட விழையவில்லை. இந்த உலகம் எதனிடமிருந்து வந்ததோ, அதனிடம் சென்றடைந்து, மீண்டும் இந்த உலக அனுபவம் ஏற்படவேண்டாம் என்றே ஆசைப்படுகிறேன். இந்த உலகை இயக்கும்  ஏதோ ஒன்று உள்ளது. அது சில விதிகளையும் ஏற்படுத்தி உள்ளது. உயிர்கள் அனைத்தும் அந்த விதிகளை மீற  முடிவதில்லை, மாற்றவும் முடிவதில்லை, அனுசரிக்க மட்டுமே முடிகிறது. மீறினால்
இயற்கை சீற்றமடைகிறது, உயிர்கள் அழிகின்றது. மரணத்துக்குபிறகு உடல் அழுகிவிடுகிறது, அதற்கு முன் எரித்து விடுகின்றோம். அதன் பின்பு ஒன்றும் புலப்படுவதில்லை. இதுவே உண்மை. ஆனால், நாம் ஆன்மா என்று எண்ணும்பொழுது, இந்த உலக வாழ்க்கையைப்பற்றிய பயம் அகன்றுவிடுகிறது. நம்பிக்கை பிறக்கின்றது.  
அதன் பின்பு இந்த உலகம் நம்மை பயமுறுத்துவதில்லை. எதையும் தாங்கும் பாங்கு வருகின்றது. எல்லோரையும் நண்பராக பார்க்கின்றோம். உலகமே இனிமையானதாக தெரிய ஆரம்பிக்கின்றது. இறைவனைப்பார்த்து புன்முறுவலிக்க ஆரம்பிக்கின்றோம். அவரது விளையாட்டு புரிய ஆரம்பிக்கின்றது. விதிகள் புரிந்த பின், விளையாட்டில் ஈடுபட்டு, விளையாட்டில் வெல்ல முயல்கிறோம். அதுவே இறைவனும் விரும்புகின்றார். சிலசமயம் கஷ்டங்கள் கொடுத்து, நம்மை பலஹீனபடுத்துகிறார்
சில சமயம் தோள் கொடுத்து உதவுகிறார். அனால் விளையாட்டை வெல்லும் குறியிலிருந்து நாம் என்றும் விலகக்கூடாது. நாமும் அவருடன் சேர்ந்து விளையாடுவோம், அவரது விளையாட்டை ரசிப்போம். வென்று விட்டால் நாம் அவருடன் ஒன்றாவோம், இணை பிரியாமல் இணைவோம்.

No comments: